ஹரியானா மாநிலத்தில் தெருநாய்களின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சோனிபட் பகுதியில் 6 மாதக் குழந்தையைப் பிட்புல் நாய் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அடங்குவதற்குள், தற்போது ரோத்தக் பகுதியில் தெருநாய் ஒன்று பொதுமக்களைக் கடித்துக் குதறியுள்ளது. ரோத்தக் ஓல்ட் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அப்பகுதியில் உள்ள பெண் ஒருவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் அமைதியாக அமர்ந்திருந்த தெருநாய் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது பாய்ந்து சென்று காலைக் கொடூரமாகக் கடித்துக் குதறியது. வலியால் அலறிய அவரது சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், நாயை அடித்து விரட்டி அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த வெறிபிடித்த நாய், அடுத்தடுத்து வெறும் 30 நிமிட இடைவெளியில் மேலும் 5 முதல் 6 பேரைக் கடித்துக் குதறியதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
அமைதியாக அமர்ந்திருந்த நாய் திடீரெனப் பாய்ந்து தாக்கும் இந்தக் கொடூரமான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் தாக்குதல்களால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட கடும் அச்சமடைந்துள்ளனர். எனவே, அப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், ஆபத்தான நாய்களை உடனடியாகப் பிடித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்ளாட்சி நிர்வாகம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
