ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி பகுதியில் கலப்படப் பால் அருந்திய 14-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் கிருஷ்ணவேணி, ராதாகிருஷ்ணா, சேஷகிரி ராவ் மற்றும் ரமணி ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாதிப்பிற்கு ‘அனுரியா’ (Anuria) எனப்படும் சிறுநீரகச் செயல்பாடு முடக்கம் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
விசாரணையில், நரசாபுரத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ் என்ற பால் வியாபாரி, சுமார் 42 பேரிடம் இருந்து பாலைச் சேகரித்து 106 குடும்பங்களுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது. இதில் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட பால் மாதிரிகளைச் சேகரித்த அதிகாரிகள் தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்
