தவறான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்வியல் மாற்றங்களால் இன்று பலரும் ‘கொழுப்பு கல்லீரல்’ பிரச்சனைக்கு ஆளாகின்றனர். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது, ஆரம்பகட்டமாக இரவு முழுவதும் நன்றாகத் தூங்கினாலும் காலையில் அதீத உடல் சோர்வு ஏற்படும்.
மேலும், தோலில் திடீர் வறட்சி, அரிப்பு, முகப்பருக்கள் தோன்றுவதுடன் சருமம் பொலிவிழந்து கருமையாகத் தொடங்கலாம். பசியின்மை, அடிக்கடி ஏற்படும் குமட்டல் உணர்வு மற்றும் வயிற்றின் வலது பக்க விலா எலும்புக்குக் கீழே லேசான வலி அல்லது ஒருவித அசௌகரியம் போன்றவை கல்லீரல் வீக்கத்தின் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
இந்த நோய் நிலையைப் பொறுத்து நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. தொடக்கத்தில் வெறும் கொழுப்பு மட்டும் சேரும் நிலையில் அறிகுறிகள் தெரிவதில்லை. ஆனால் அடுத்தடுத்த கட்டங்களில் கல்லீரல் வீக்கம் அடைந்து, திசுக்கள் தழும்புகளாக மாறி, இறுதியாகக் கல்லீரல் சுருங்கும் ஆபத்தான நிலைக்குகொண்டு செல்லும்.
ஆரம்பத்திலேயே இதைக் கண்டறிந்தால் முறையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் முழுமையாகக் குணப்படுத்த முடியும். எனவே, மேற்சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
