அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பொதுநிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், தங்களது மைனாரிட்டி ஆட்சையைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்திலேயே தமிழக வெற்றிக் கழகம் பணம் கொடுத்து இந்த சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதாகத் தெரிவித்தார். மேலும், வாக்களித்த தொகுதி மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டு, தங்களது பதவிகளை எதற்காக ராஜினாமா செய்தார்கள் என்பதற்கான உண்மையான காரணத்தை இதுவரை அந்த உறுப்பினர்கள் வெளிப்படையாகக் கூறவில்லை என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
சுயநலத்திற்காகத் தொகுதி மக்களை ஏமாற்றியவர்களுக்குத் தகுந்த பாடம் கற்பிப்பதற்காகவே தற்போது இந்த இடைத்தேர்தல் களம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட பொள்ளாச்சி ஜெயராமன், ஜனநாயக முறையில் மக்கள் அளிக்கும் வாக்களிப்பே இத்தகைய அரசியல் கூத்துகளுக்குச் சரியான பதிலாக இருக்கும் என்றார். பண பலத்தை நம்பி களம் இறங்கியுள்ளவர்களின் உண்மை முகத்தை தொகுதி மக்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளதாகவும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அவர்களுக்கு மக்கள் நிச்சயம் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
