சுதந்திர இந்தியாவின் நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு திருப்பமாக, தீராத உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த ஹரிஷ் ராணாவிற்கு கருணைக்கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 1973-ம் ஆண்டு மும்பையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோமா நிலையில் இருந்த செவிலியர் அருணா ஷான்பாக் வழக்கிலேயே கருணைக்கொலைக்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. இருப்பினும், அவருக்கு அந்த உரிமை அப்போது மறுக்கப்பட்ட நிலையில், தற்போது ஹரிஷ் ராணாவின் வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ள ஒரு வரலாற்றுச் சான்றாகப் பார்க்கப்படுகிறது.
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஹரிஷ் ராணாவின் பெற்றோரின் அளப்பரிய தியாகத்தையும் வேதனையையும் உணர்ந்து இந்த உத்தரவை பிறப்பித்தது. “ஒருவரை நேசிப்பது என்பது மகிழ்ச்சியான தருணங்களில் மட்டுமல்ல, அவர்களின் கடினமான காலத்திலும் உடன் இருப்பதே உண்மையான அரவணைப்பு” என நீதிபதிகள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். பல ஆண்டுகளாகத் தன் மகனின் வலியை நேரில் கண்டு துடித்த அந்தப் பெற்றோரின் ஆழ்ந்த சோகத்தை நீதிமன்றம் அங்கீகரித்ததோடு, பிரம்ம குமாரி அமைப்பின் சட்ட உதவிகளுடன் இந்த அமைதியான விடைபெறுதல் சாத்தியமானது.
இறுதி நிமிடங்களில் மருத்துவர்கள் உயிர் காக்கும் கருவிகளைத் துண்டித்தபோது, ஹரிஷ் ராணாவின் தாய் தன் மகனுக்கு அளித்த கண்ணீர் மல்கிய விடைபெறுதல் இணையவாசிகளின் இதயத்தை உலுக்கியுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான 22 விநாடி வீடியோவில், பிரம்ம குமாரி அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹரிஷின் நெற்றியில் திலகமிட்டு, “அனைவரையும் மன்னியுங்கள், மன்னிப்பு கேளுங்கள்… இப்போது செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று கூறி வழிஅனுப்பிய காட்சி, மரணத்தின் வாயிலிலும் ஒரு அமைதியான விடுதலையை நோக்கிய பயணமாக அமைந்தது. பல ஆண்டுகாலத் துயரத்திற்குப் பிறகு, ஹரிஷ் ராணா தற்போது அந்தத் தீராத வேதனையிலிருந்து விடுபட்டுள்ளார்.
“Forgive everyone… apologize to everyone… it’s time to go now, okay?”
Harish Rana has been brought to AIIMS, Delhi. His life support will now be removed.
13 yrs of a family’s hope, prayers and sacrifice ending today 💔 pic.twitter.com/qZt4RYtA3x
— BALA (@erbmjha) March 15, 2026
