மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழும் கார்க் தீவைக் கைப்பற்றுவது குறித்து அமெரிக்கா தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. ஈரானின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதம் இந்தத் தீவின் வழியாகவே நடைபெறுவதால், இதனைத் தன்வசப்படுத்துவதன் மூலம் ஈரானின் வருமானத்தை முடக்கி அந்நாட்டைப் பொருளாதார ரீதியாகப் பலவீனப்படுத்த டிரம்ப் நிர்வாகம் திட்டமிடுகிறது.
மேலும் ஹார்மூஸ் நீரிணை பகுதியில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், நேட்டோ நாடுகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாத நிலையிலும், அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இத்தகைய தீவிரமான முடிவுகளை நோக்கி நகர்ந்து வருவது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கை உலகளாவிய எரிபொருள் சந்தையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் கார்க் தீவு என்பது வெறும் எண்ணெய் சேமிப்பு தளம் மட்டுமல்லாது, ஈரானின் ராணுவ மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேந்திரப் புள்ளியாகும். அமெரிக்கா இந்தத் தீவை நேரடியாகத் தாக்கினாலோ அல்லது கைப்பற்ற முயன்றாலோ, அதற்குப் பதிலடியாக ஈரான் சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள எண்ணெய் தளங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
