தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனிடையே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் சமீபத்தில் நடந்த கரூர் துயரத்தில் விஜய்க்கு சட்டரீதியாக பல சிக்கல்கள் வந்த நிலையில் அதனை பொறுமையாக கையாண்டு மீண்டும் கட்சியை மீட்டெடுத்துள்ளார்.
அடுத்தடுத்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை விஜய் தீவிரப்படுத்தி உள்ளார். சமீபத்தில் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்தித்து பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியின் அரசியல் பணிகள் வேகம் எடுத்துள்ளது. கட்சியின் உள்கட்டமைப்பை வலுவாக்கும் நோக்கத்தில் திமுக பாணியில் 10 மண்டலங்களாக தமிழகத்தை பிரித்து அதற்கு பொறுப்பாளர்களை விஜய் நியமிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த பொறுப்பாளர்கள் பட்டியல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
