தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு பல வியூகங்களை வகுத்து வருகிறது. இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இருப்பதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த சில நாட்களாகவே மாற்றுக் கட்சியினர் பலரும் தொடர்ந்து திமுகவில் இணைந்து வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் அதிமுகவிலிருந்து விலகிய 2000 பேர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கடந்த மாதம் 13ஆம் தேதி திமுகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் ஓசூர் மாநகர கிழக்கு மண்டல குழு தலைவர் புருஷோத்தம ரெட்டி தலைமையில் இந்த இணைப்பு நடைபெற்றுள்ளது. மேலும் கே.பி முனுசாமி மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை குறி வைத்து திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
