திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பணமுகை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மனைவி வனிதா. இந்த தம்பதிகளுக்கு பிரணிதா (11), டிக்ஷிதா(9), டில்ஷிதா(7) மூன்று மகள்கள் உள்ளனர். இதனிடையே கடந்த 23ஆம் தேதி காலையில் வனிதா மகள்களுடன் வீட்டில் சமைத்த வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்டு உள்ளார். அன்று இரவு வனிதா மற்றும் மூன்று மகள்களுக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மறுநாள் காலை அருகில் உள்ள தனியார் கிளினிக் சென்று மூன்று பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
அதன்பிறகு அன்று மாலையில் பிரணிதா, டிக்க்ஷிதா இருவரும் மயக்கம் அடைந்ததால் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையிலும் பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி பிரணிதாவை மட்டும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அம்மா சமைத்த வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
