அமித்ஷாவுடன் 2 மணி நேரம் ரகசிய மீட்டிங்… EPS சொன்ன அந்த ஒற்றை வார்த்தை… ஓபிஎஸ் – சசிகலாவுக்கு செக்… அதிமுக கூட்டணியில் புதிய திருப்பம்..!!

By Soundarya on பங்குனி 3, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மார்ச் 2-ஆம் தேதி இரவு சந்தித்துப் பேசினார். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சசிகலா தொடங்கிய புதிய கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதிமுகவின் உள்விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சி தலையிடாது என்று அமித் ஷா ஏற்கனவே உறுதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அதிமுகவில் இடமில்லை என்ற தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

தற்போதுள்ள அரசியல் சூழலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகவும் சுமூகமாகவும், எழுச்சியுடனும் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். சில கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் விரைவில் முறைப்படி தொடங்கும் என்றும், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.