முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்த அதிரடி முடிவு, அவரது தீவிர ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவரது சொந்த கோட்டையான தேனி மாவட்டத்திலேயே இந்த முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் வெளிப்பாடாக, மார்க்கையன்கோட்டை முன்னாள் பேரூராட்சித் தலைவர் அகிலன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், ஓ.பி.எஸ்-ன் அரசியல் நிலைப்பாட்டில் உடன்பாடு இன்றி மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
பெரியகுளம் நகர நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்த இவர்கள், தங்கள் வீடுகளில் நீண்டகாலமாக வைத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்களை அகற்றிவிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்-ன் புகைப்படங்களை வைத்துள்ளனர். “தாய் கழகமான அதிமுகவையே முழுமையாக நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ள இந்த நிர்வாகிகள், ஓ.பி.எஸ்-ன் திமுக இணைப்பு என்பது தங்களது கொள்கைக்கு எதிரானது என்றும், இனி எடப்பாடியார் தலைமையிலேயே கட்சிப் பணியாற்றுவோம் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
