மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை அனுபவித்து வந்த 17 வயது சிறுமி ஒருவர், ChatGPT செயலியின் சரியான வழிகாட்டுதலால் தனது தந்தையின் கொடூரப் பிடியில் இருந்து தைரியமாக மீட்கப்பட்டுள்ளார். வெல்டிங் கடை நடத்தி வரும் 55 வயது நபர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து, தனது மூன்று பிள்ளைகளைத் தனியாக வளர்த்து வந்துள்ளார். ஆனால், காக்க வேண்டிய தந்தையே தனது இளைய மகளுக்குக் காம மிருகமாக மாறிய கொடூரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அச்சிறுமிக்கு 7 வயது இருக்கும் முதலே, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நபர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை மற்றும் பல்வேறு உடல் ரீதியான துன்புறுத்தல்களை அளித்து வந்துள்ளார். சிறுமியின் நடமாட்டத்தையும் மொபைல் பயன்பாட்டையும் தீவிரமாகக் கண்காணித்து வந்ததோடு, மற்ற பிள்ளைகள் வீட்டில் இல்லாத நேரங்களில் தவறான காணொளிகளைப் பார்க்கக் கட்டாயப்படுத்தி மனரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளார். சொந்த வீட்டிலேயே சிறைவைக்கப்பட்ட பறவையைப் போல, யாரிடமும் உதவி கேட்க முடியாமல் அச்சத்தின் எல்லையில் அச்சிறுமி தவித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், இந்தத் துயரத்திற்கு விடிவு தேட நினைத்த சிறுமி, தனது மொபைலில் இருந்த ChatGPT செயலியின் உதவியை நாடியுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்து, இதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று அதில் கேட்டுள்ளார். அதற்கு அந்தச் செயலி, “இது ஒரு கடுமையான குற்றம், உடனடியாக உதவி பெற வேண்டும்” என்று அறிவுறுத்தியதுடன், குழந்தைகளுக்கான அவசர உதவி எண்ணான 1098-ஐ தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளது. தொழில்நுட்பம் காட்டிய அந்த ஒற்றை வழி, அச்சிறுமியின் வாழ்வில் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்தது.
இதனைத் தொடர்ந்து, துணிச்சலுடன் குழந்தைகள் நல அமைப்புகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களைச் சிறுமி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உடனடியாகச் செயல்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நவி மும்பை காவல்துறையினர், சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். விசாரணையில் தந்தையின் கொடூரங்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட காலத் துயரத்திற்குப் பின், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையோடு ஒரு சிறுமி உயிர் தப்பிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
