ஏற்கனவே 2 மனைவிகள், 3 பிள்ளைகள்.. 45 வயது ஆசாமியிடம் சிக்கிய 15 வயது சிறுமி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. திடுக்கிடும் பின்னணி..!!

By Muthu Mani on ஆனி 18, 2026

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் மல்லிகாபுரம் கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி புனித அந்தோணியார் ஆலயத் தேர் திருவிழாநடைபெற்றது. இந்த திருவிழாவை பார்க்க நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவர் தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது மாணவி திடீரென மாயமானதால், அவரது பெற்றோர் உத்தரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சைபர் கிரைம் உதவியுடன் மாணவியின் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர். அதில், உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம் சேந்தாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியகோடி என்பவரின் மகன் ஜீவா என்ற ஜீவானந்தம் என்பவருடன் அந்த மாணவிக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அவரது மொபைல் சிக்னலை வைத்து போலீஸார் தேடியபோது, ஜீவானந்தம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற போலீஸார், கழுத்தில் தாலியுடன் இருந்த மாணவியையும் ஜீவானந்தத்தையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 45 வயதான ஜீவானந்தத்திற்கு ஏற்கனவே தேவி என்ற முதல் மனைவியும், அவர்களுக்குக் கல்லூரி மற்றும் பள்ளியில் படிக்கும் மூன்று பிள்ளைகளும் இருப்பது தெரியவந்தது. மேலும், சுமித்ரா என்ற இரண்டாவது மனைவியும், அவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், தற்போது சுமித்ரா 4 மாத கர்ப்பமாக இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.

   

இத்தோடு, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் இந்த 15 வயது மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்திய ஜீவானந்தம், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக அந்த மாணவி தற்போது கர்ப்பமடைந்துள்ளார். இந்த நிலையில், திருவிழாவிற்கு வந்த மாணவியை அச்சரப்பாக்கம் கடத்திச் சென்று, அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து தாலிகட்டி லாட்ஜில் தங்கியிருந்தது உறுதியானது. இதையடுத்து, ஜீவானந்தத்தின் மீது போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில், 45 வயது நபர் பள்ளி சிறுமியைக் கடத்தித் திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.