செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 11 வயது பள்ளி சிறுமி ஒருவர், தனது வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவன் (43) என்பவர் சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பெற்றோரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மகாதேவனைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட மகாதேவனை செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவரைச் சிறையில் அடைத்தனர். வீட்டின் வாசலில் விளையாடிய சிறுமியிடம் முதியவர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
