யார் பாத்த வேலைடா இது?…. தக்காளி வெற்றிக் கழகம்’ என மாறிய போர்டு…. சென்னை பேருந்தில் அதிர்ச்சி சம்பவம்….!

By Nanthini on ஆவணி 6, 2026

Spread the love

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் (எம்டிசி) பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில் ‘தக்காளி வெற்றிக் கழகம்’ என்ற சர்ச்சைக்குரிய வாசகம் இடம்பெற்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அடையாறு பணிமனையிலிருந்து இயக்கப்படும் ‘119’ எண் கொண்ட பேருந்தில் நிகழ்ந்த இச்சம்பவம், அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஒரு கட்சியின் பெயரை விசித்திரமாக உருவகப்படுத்தி, மர்ம நபர்கள் செய்த இந்த விஷமத்தனம் குறித்துப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் உடனடியாகப் பதில் அளித்து விளக்கமளித்துள்ளது. அதில், குறிப்பிட்ட அந்தப் பேருந்தின் வழித்தடப் பலகையில் இருந்த விவரங்கள் சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தன்னிச்சையாக மாற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தவறான தகவல் குறித்துத் தெரியவந்த உடனேயே, சம்பந்தப்பட்ட பணிமனை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பெயர் பலகை உடனடியாகச் சரிசெய்யப்பட்டதாகவும் போக்குவரத்து நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

   

மேலும், பொதுமக்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளின் டிஜிட்டல் பலகைகளில் இதுபோன்ற அத்துமீறல்கள் இனிவரும் காலங்களில் நிகழாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தீவிர கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்.டி.சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறா அல்லது திட்டமிட்டச் செயலா என்ற கோணத்திலும், எதிர்காலத்தில் பேருந்துகளின் வழித்தட அமைப்புகளை எளிதில் யாரும் மாற்ற முடியாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.