உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், வெறும் இரண்டு இனிப்புகளுக்காக 11 வயது சிறுவன் டீசல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடைபெற்ற ஒரு திருமண விழாவின் போது, அமர் (என்கிற சமன்) என்ற சிறுவன் இரண்டு ரசகுல்லாக்களை எடுத்துச் சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கேட்டரிங் ஒப்பந்ததாரர், அச்சிறுவன் மீது டீசலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவன், தற்போது லக்னோவில் உள்ள கே.ஜி.எம்.யு (KGMU) மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். மனிதநேயமற்ற இந்தச் செயல் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய அந்த ஒப்பந்ததாரரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வெறும் இரண்டு ரசகுல்லாக்களுக்காக ஒரு சிறுவனின் வாழ்வைச் சிதைத்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
