பாகிஸ்தானின் மலைப்பகுதியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளி உலகத் தொடர்பின்றி, தன் கணவரால் சிறைவைக்கப்பட்டிருந்த பிரெஞ்சுப் பெண் மற்றும் அவரது ஐந்து குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள அதிரவைக்கும் சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொடூரச் சிறைவாசத்திலிருந்து தப்பிய அவர்களின் மகன்களில் ஒருவர் காவல்துறையினருக்கு அளித்த ரகசியத் தகவலின் பேரில், ஜூன் 18 அன்று அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தி இக்குடும்பத்தினரை மீட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பாரா என்ற மலைப்பகுதியில், பாழடைந்த மற்றும் நெரிசலான ஒரு அறையில்தான் 54 வயதான சில்வி யாஸ்மினாவும் அவரது ஐந்து பிள்ளைகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். மீட்கப்பட்டபோது அவர்களின் உடலில் கடுமையான காயங்களும், மனரீதியான பாதிப்புகளும் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, பெஷாவரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில், யாஸ்மினாவின் கணவர் அவர்களைத் தொடர்ந்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்தது தெரியவந்துள்ளது. “என் கணவர் எங்களை வன்முறையோடு நடத்தினார், எங்களுடைய சுதந்திரம் முழுமையாகப் பறிக்கப்பட்டது. அவர் எங்களை தினமும் அடித்துத் துன்புறுத்தினார்” என்று யாஸ்மினா கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், தன் எதிர்காலம் பாழானதைப்போல பிள்ளைகளின் எதிர்காலமும் சீரழிந்துவிடுமோ என்று அவர் அஞ்சியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகளின் தகவல்படி, இந்தத் தம்பதியினர் கடந்த 2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்துகொண்டனர். அப்போது அவரது கணவர் அங்குச் சட்டவிரோதமாக வசித்து வந்துள்ளார். பின்னர் 2014-ல் தங்களது இரண்டு மூத்த பிள்ளைகளுடன் அவர்கள் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். பாகிஸ்தானுக்கு வந்த நாள் முதலே அந்தக் குடும்பம் கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் கொண்டுவரப்பட்டு, வெளி உலகத் தொடர்பின்றி முடக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடுமையால் மூத்த பிள்ளைகள் இருவரும் தங்களது கல்வியைத் தொடர முடியாமல் போயுள்ளது. பாகிஸ்தானில் பிறந்த மூன்று இளைய பிள்ளைகள் இதுவரை பள்ளிக்கூட வாசலையே மிதித்ததில்லை என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது இக்குடும்பத்தினர் பிரான்சுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதால், இது குறித்து பிரெஞ்சு தூதரகத்திற்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. குற்றவாளியான கணவரைக் கைது செய்துள்ள பாகிஸ்தான் காவல்துறை, இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
