சென்னை வேளச்சேரி லட்சுமி நகரைச் சேர்ந்த பார்த்திபன் (23) என்பவர் செப்டோ (Zepto) நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு அவர் வேளச்சேரி ஜே.என். நகர் குடியிருப்புப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் அவரை வழிமறித்துள்ளனர். திடீரென தங்களது கையில் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் பார்த்திபனை கீழே தள்ளி, கை, கால் மற்றும் நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் துடித்த பார்த்திபன், தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சிய அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
குடியிருப்புப் பகுதியில் அரங்கேறிய இந்த கொலைவெறித் தாக்குதலைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக ஒன்றுதிரண்டு கற்கள் மற்றும் கட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியவர்களை விரட்டியடித்தனர். பொதுமக்களின் துணிச்சலான செயலால் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. பலத்த காயமடைந்த பார்த்திபனை மீட்ட பொதுமக்கள், அவரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து டெலிவரி ஊழியரை அரிவாளால் வெட்டிய இச்சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய மர்ம நபர்களைக் கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
