“தீ பரவட்டும்” என்றாலே அலறுகிறார்கள்… மேடையில் உதயநிதி போட்ட ‘ஸ்கெட்ச்’.. யாருக்கு அந்த பயம்…?

By Nanthini on தை 20, 2026

Spread the love

சென்னை புத்தகக் கண்காட்சியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் வழங்கப்பட்ட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திராவிட இயக்கத்தின் வளர்ச்சி என்பது வாசிப்பு மற்றும் எழுத்தின் மீது கட்டமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். குறிப்பாக, பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்று ஏற்றி வைத்த ‘அறிவுத் தீ’ இன்றும் அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அண்ணாவின் புகழ்பெற்ற வாசகமான “தீ பரவட்டும்” என்பதைக் குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், அண்ணா அன்று பற்ற வைத்த அந்த அறிவுச் சுடர் இன்றும் சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். அண்ணாவின் பெயரைக் கேட்டாலே இன்றும் சிலர் நடுங்குகிறார்கள் என்று சாடிய அவர், திராவிட இயக்கம் தந்தை பெரியார் மற்றும் அண்ணா காட்டிய வழியில் அறிவுச் சமூகத்தை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார். உலகத் தலைவர்களின் சிந்தனைகளைத் தம்பிகளுக்குக் கடிதங்கள் வாயிலாக அண்ணா கடத்தியதை அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

   

தமிழக மக்கள் வாசிப்பின் மீது கொண்டுள்ள ஆர்வமே இந்தியாவிலேயே தமிழகத்தை முன்னணி அறிவுச் சமூகமாக மாற்றியுள்ளது என்று அவர் பாராட்டினார். முற்காலத்தில் விடுமுறை நாட்களில் கடற்கரைக்கும் தியேட்டர்களுக்கும் சென்ற மக்கள், இன்று குடும்பம் குடும்பமாகப் புத்தகக் கண்காட்சியை நோக்கி வருவது மிகப்பெரிய மாற்றமாகும் என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். தமிழகம் முழுவதும் ‘அறிவுத் திருவிழா’ என்ற பெயரில் புத்தகக் கண்காட்சிகளை ஆண்டுதோறும் நடத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும், இதற்கு சென்னை புத்தகக் கண்காட்சியே முன்னோடியாகத் திகழ்வதாகவும் உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.