“காவல் நிலையத்தில் புகுந்து யூடியூபருக்கு தர்மஅடி…” கடைகாரர்களிடம் மாமூல் கேட்டதாக எழுந்த புகாரால் நடுரோட்டில் கைகலப்பு…! பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 30, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் தானே கிழக்கு பகுதியில் உள்ள கோப்ரி காவல் நிலைய வளாகத்திற்குள், “யூடியூப் பாய்” என்றழைக்கப்படும் பிரபல யூடியூபரும், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் யுவசேனா நிர்வாகியுமான சித்தேஷ் “சிது” அபங்கே தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்ரி சந்தைப் பகுதியில் துணிக் கடை வைத்துள்ள பெண் வியாபாரிகள் சிலர், சித்தேஷ் அபங்கே தங்களிடம் தினமும் கடைக்கு ரூ.500 வீதம் சட்டவிரோதமாக மாமூல் கேட்டு மிரட்டுவதாகவும், தொந்தரவு செய்வதாகவும் புகார் அளிக்கக் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அபங்கேவிற்கும் அப்பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது காவல் நிலைய வளாகத்திலேயே கைக்கலப்பாக மாறியது. இதில் பெண்கள் சிலர் அபங்கேவையும் அவரது மனைவியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

   

இச்சம்பவம் குறித்துப் பேசிய வியாபாரிகள், “சந்தையில் தொடர்ந்து மிரட்டி மாமூல் கேட்டு வந்ததால் புகார் அளிக்க வந்தோம், அப்போது அவர் எங்களை எதிர்த்ததால் மோதல் ஏற்பட்டது” என்றனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள சித்தேஷ் அபங்கே, “என் மீது சுமத்தப்பட்ட மாமூல் புகார்கள் அனைத்தும் பொய்யானவை; எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க அரசியல் ரீதியாகச் செய்யப்பட்ட சதி” என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, இருதரப்பு புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.