கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த முட்டை மொத்த வியாபாரியான திருமால் என்பவரின் மகன் ஜினேஷ் மூர்த்தி (26). பி.இ. பட்டப்படிப்பை முடித்த இவர், தனது தந்தையுடன் சேர்ந்து குடும்பத் தொழிலைக் கவனித்து வந்தார். இதனிடையே, மகனை மேலும் மேற்படிப்பு படிக்க வைக்க பெற்றோர் விரும்பிய நிலையில், ஜினேஷ் மூர்த்திக்கு அதில் உடன்பாடு இல்லாததால் வீட்டில் அடிக்கடி கருத்து வேறுபாடும் வாக்குவாதமும் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் தனது அறைக்குச் சென்று உறங்கிய ஜினேஷ் மூர்த்தி, மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் உள்ளே சென்று பார்த்தபோது, அவர் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக்கண்டு பேரதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் போது, “எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை; பெற்றோருக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை” என்று ஜினேஷ் மூர்த்தி கைப்பட எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் உண்மைத்தன்மை மற்றும் இச்சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
