” வேலையில்லாத நீயெல்லாம் ஆம்பளையா, என் புள்ளைய தொடாத”… மனைவியின் டார்ச்சரால் தூக்கில் தொங்கிய கணவன்….!

By Nanthini on தை 10, 2026

Spread the love

பீகார் மாநிலம் சமஸ்திபூரில் குடும்பத் தகராறு காரணமாக 31 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட திக்விஜய் குமார், தான் இறப்பதற்கு முன் எழுதிய நான்கு பக்க கடிதத்தில், தனது மனைவி மற்றும் மாமனார் குடும்பத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனது மனைவி தன்னை வேலையில்லாதவன் என்று கேலி செய்ததாகவும், தனது நண்பர்களின் கணவர்களுடன் தன்னை ஒப்பிட்டு மனரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது குழந்தையை பார்க்க விடாமல் தடுத்ததும், மாமனார் வீட்டார் தன்னை தாக்கியதுமே தற்கொலைக்கு தூண்டிய முக்கிய காரணங்கள் என அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்த திக்விஜய், குடும்பப் பிரச்சனைகளால் தனது வாழ்க்கை சீரழிந்துவிட்டதாகத் தனது கடிதத்தில் வேதனை தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு கடைக்குச் சென்று கயிறு வாங்கி வந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது தாயார் உணவருந்த அழைத்தபோது, அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பட்டோரி காவல்துறையினர், கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு இளைஞனின் கனவுகளும் வாழ்க்கையும் குடும்பப் பூசலால் பறிபோனது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.