உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்ற மகளையே பெற்றோர்கள் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 18 வயதான ஆர்த்தி என்ற அந்தப் பெண், தனது கிராமத்தைச் சேர்ந்த பிரிஜேஷ் என்பவரைக் காதலித்து வந்ததோடு, அவரையே திருமணம் செய்துகொள்ளப் போவதாக பிடிவாதமாக இருந்துள்ளார். ஆனால், மகளின் காதலை ஏற்காத தந்தை ராம்லகன் மற்றும் தாய் கிருஷ்ணாவதி ஆகியோர், ஆர்த்திக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு ஆர்த்தி சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த பெற்றோர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை வேளையில் துப்பட்டாவால் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
இந்தக் கொடூரச் செயலை மறைக்க முயன்ற பெற்றோர், தங்கள் மகளை பிரிஜேஷ் தான் கொலை செய்ததாகக் கூறி காவல்துறைக்குத் தவறான புகாரை அளித்தனர். ஆனால், காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் பெற்றோரின் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இறுதியில், தங்கள் மகளைக் கொலை செய்ததை ராம்லகனும் கிருஷ்ணாவதியும் ஒப்புக்கொண்டனர். கௌரவம் என்ற பெயரில் சொந்த மகளையே உயிரோடு கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
