ஒரு அமெரிக்க பெண் பயணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான கேரளா பயண அனுபவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகெங்கும் செய்யும் அந்தப் பெண், சமீபத்தில் கேரளாவுக்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தனது ஏடிஎம் கார்டை தொலைத்துவிட்டார். புதிய இடத்தில் பணத்தை எடுக்க உதவும் கார்டு தொலைந்ததால் அவர் மிகுந்த கவலையில் ஆழ்ந்தார்.
ஆனால், கேரளாவின் மனிதநேயம் அவரை வியப்பில் ஆழ்த்தியது. கார்டைக் கண்டெடுத்த கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், அந்தப் பெண்ணின் முகவரியையோ அல்லது அவர் தங்கியிருக்கும் இடத்தையோ எப்படியோ தேடிக் கண்டுபிடித்து கார்டை அவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் தனது ஆட்டோவிலேயே சுமார் 6 மணி நேரம் பயணம் செய்து, அந்தப் பெண்ணிடம் பாதுகாப்பாக கார்டை ஒப்படைத்துள்ளார்.
கார்டைப் பெற்றுக்கொண்ட அமெரிக்கப் பயணி, அந்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையையும் மனிதநேயத்தையும் பார்த்து நெகிழ்ந்து போனார். “கேரளாவில் நான் சந்தித்த ஒரு பொதுமகன் எனக்காக 6 மணி நேரம் ஆட்டோ ஓட்டி வந்து எனது ஏடிஎம் கார்டை திருப்பிக் கொடுத்தார்” என்று வீடியோ மூலம் தனது நன்றியையும், கேரள மக்களின் அன்பையும் பெருமையுடன் உலகிற்குப் பகிர்ந்துள்ளார்.
