கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் தூய்மை பணியாளராக வேலை செய்துவரும் இவருக்கு திருமணம் ஆகி ஜெய்சங்கரன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளார்கள் . இதில் ஜெய்சங்கரன் கல்லூரியில் படித்துவிட்டு மேற்படிப்புக்காக காத்திருந்துள்ளார். ஜெய்சங்கரனும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளார்கள். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் ஜெய்சங்கர் காதலியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார் . அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் ஜெய்சங்கர் தன்னுடைய காதலியிடம் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக பேசிக்கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு வந்துள்ளது. இதனால் மிரட்டுவதற்காக விளையாட்டாக தன்னுடைய வீட்டில் போர்வையால் தூக்கிட்டுள்ளார். அப்போது திடீரென்று போர்வை இறுக்கி உயிருக்கு போராடியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஜெய்சங்கரின் தாயார் ஓடி வந்து கதவை திறக்க முயன்றார். ஆனால் முடியாததால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெய்சங்கர் பரிதாபமாக இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
