திருப்பத்தூர் மாவட்டம் பார்சல் ஊராட்சி பசுமைநகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ். இவர் ரயில்வே துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராகுல் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று விட்டனர். மாலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது வாசலில் நிறுத்தி இருந்த கார் வீட்டிற்குள் இருந்த மடிக்கணினி ஆகியவை காணாமல் போனது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் குடும்பத்தினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ராகுலின் நண்பனான நிரஞ்சன்(19) என்பவர் காரை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்போன் சிக்னலை வைத்து நிரஞ்சனை கைது செய்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் நிரஞ்சன் கூறியதாவது, சம்பவம் நடந்த அன்று நிரஞ்சன் ராகுலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய்? எனக் கேட்டுள்ளார். உடனே ராகுல் நான் கல்லூரிக்கு வந்து விட்டேன். அம்மாவும் அப்பாவும் வேலைக்கு சென்று விட்டார்கள் என கூறியுள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த நிரஞ்சன் சாவி இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று காரின் சாவி மற்றும் மேஜை மீது இருந்த மடிக்கணியை திருடிவிட்டு சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்த கார், மடிக்கணினியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
