விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா. தனியார் பள்ளி ஆசிரியையான இவருக்கும், புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஊழியர் கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 10 பவுன் நகை தருவதாக உறுதி அளிக்கப்பட்ட நிலையில், 5 பவுன் மட்டுமே போடப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பவுன் நகையை நிலத்தை விற்றுத் தருவதாகப் பெண் வீட்டார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ள சூழலில், சொன்னபடி நகையைத் தர இயலாததால் இரு குடும்பத்தாருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்துள்ளது.
தங்கத்திற்காக பிரியங்கா அவரது கணவர் வீட்டாரால் தொடர்ந்து மனரீதியாகவும், சொல்லாலும் துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார். “அரசு வேலையில் இருக்கும் என் மகனுக்குப் பெண் கொடுக்கப் பலர் வரிசையில் நின்றார்கள், உன்னைத் தேடிப் பிடித்துத் திருமணம் செய்ததே தப்பு” என மாமியார் உள்ளிட்ட உறவினர்கள் ஜாடைப் பேசி பிரியங்காவின் மனதை ரணப்படுத்தியுள்ளனர். தனக்கு இருக்கும் மதிப்பை விடத் தங்கத்திற்கே அதிக மதிப்பு அளிக்கப்படுவதை உணர்ந்து மனமுடைந்த பிரியங்கா, தனது தாய் வீட்டிற்குச் சென்றார். அங்கேயும் அவரை விடாமல் அலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு கார்த்திகேயன் குடும்பத்தினர் தகாத வார்த்தைகளால் பேசி டார்ச்சர் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தொடர் தொல்லைகளால் விரக்தியின் எல்லைக்குச் சென்ற பிரியங்கா, இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி வில்லியனூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். 5 பவுன் வரதட்சணைக்காகத் தனது மகளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகப் பிரியங்காவின் தாய் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
