சென்னை காசிமேட்டை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் நேற்று இரவு பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து எண்ணூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்து காசிமேடு காசிபுரம் பேருந்து நிலையத்தை நெருங்கியதால் இளம் பெண் பேருந்தில் இருந்து இறங்குவதற்காக படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரின் அருகே இருந்த முதியவர் ஒருவர் இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் கத்தி கூச்சலிட்டதால் பேருந்தும் பேருந்து நிலையம் வந்தது.
இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த முதியவரை பிடித்து அங்கிருந்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் அவர் எண்ணூரை சேர்ந்த சின்னதுரை (60) என்பதும் அவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
