கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான வாணிஸ்ரீ, பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் போது அறிமுகமான அபிஷேக் என்ற இளைஞர், வாணிஸ்ரீயிடம் தனது காதலைத் தெரிவித்துள்ளார். எனினும், அந்த காதல் விருப்பத்தை இளம்பெண் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.
காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னிடம் இருந்த வாணிஸ்ரீயின் சில தனிப்பட்ட புகைப்படங்களைக் காட்டி அவரை மிரட்டத் தொடங்கினார். தனது தவறான ஆசைக்கு இணங்கவில்லை என்றால், அந்தப் படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி மானத்தைக் கெடுத்துவிடுவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளார். இந்தத் தொடர் மிரட்டல்களாலும், தொல்லைகளாலும் அந்த இளம்பெண் கடும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார்.
இளைஞரின் தொல்லையைத் தாங்க முடியாத வாணிஸ்ரீ, தனது குடும்பத்தின் கவுரவத்தைக் காப்பதற்காக ஏரியில் குதித்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டதோடு, அவர் தங்கியிருந்த அறையிலிருந்து ஒரு உருக்கமான கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், தனது தற்கொலைக்கு அபிஷேக்கின் மிரட்டல்களே காரணம் என்றும் அவனுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அந்த இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
