புதுச்சேரி, வில்லியனூர் வி.மணவெளியைச் சேர்ந்த 41 வயது நிரம்பிய தமிழ்ச்செல்வி என்பவர், கணவரை விவாகரத்து செய்தபின் மகளுடன் வசித்து வந்தார். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மகளைப் பள்ளியில் விட்டுச் சென்றவர், மாலை பள்ளிக்கு மகளை அழைக்க வரவில்லை. இதனால் அவரது தம்பி மதன்ராஜ், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் தமிழ்ச்செல்வியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, ஒதியம்பேட்டையைச் சேர்ந்த பர்னிச்சர் கடை உரிமையாளர் ஐயப்பன் (45) என்பவருடன் அவர் கடைசியாகப் பேசியது தெரியவந்தது. போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில், அவர்தான் தமிழ்ச்செல்வியைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
ஐயப்பனும் தமிழ்ச்செல்வியும் கள்ளக்காதல் உறவில் இருந்ததாகவும், சமீபத்தில் தமிழ்ச்செல்வி ஐயப்பனிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தன்று தமிழ்ச்செல்வி, ஐயப்பனின் வீட்டிற்குச் சென்றபோது, ஐயப்பன் பணத்தைத் திரும்பக் கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஐயப்பன், தமிழ்ச்செல்வியைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு, சடலத்தை பாலித்தீன் சாக்குப் பையில் மூட்டையாகக் கட்டி, வில்லியனூர் கோர்க்காடு வாய்க்காலில் வீசியுள்ளார். ஐயப்பன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். . ஐயப்பனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
