ஜாகர்ண்ட் மாநிலம் கத்வா மாவட்டத்தில், சமூக வலைதளங்களுக்கான ரீல்ஸ் வீடியோ எடுக்கும் மோகம் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நகர்-உந்தாரி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் பூர்ணிமா (19) என்ற இளம் பெண் ரீல்ஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
அவர் தண்டவாளத்தில் கவனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில், எதிர்பாராதவிதமாக ராஞ்சி-சோபன் எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் பூர்ணிமா தனது இரு கைகளையும் இழந்ததுடன், உடலின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காயங்களுக்கு ஆளாகினார்.
உடன் இருந்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
