உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில் இளம்பெண் ஒருவர் அலற அலற ஒரு கும்பலால் காரில் கடத்தப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குர்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட காரில் ஒரு கும்பல் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகத் தள்ளி ஏற்றிச் செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்தப் பெண் காரின் உள்ளே இருந்தபடி, “இவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள், காப்பாற்றுங்கள்” என்று கதறும் சத்தம் கேட்போரைக் கலங்கச் செய்கிறது.
Visuals from Mainpuri, UP
A woman who identifies herself as Rinku Sharma is being forcibly taken away in a car in presence of a cop, most likely from Rajasthan police. She can be heard pleading "I don't want to go with them, they'll kill me."
Is police now aiding kidnapping of… pic.twitter.com/pUP7GiWq2v
— Piyush Rai (@Benarasiyaa) March 9, 2026
இந்தச் சம்பவத்தின்போது அங்கிருந்த பொதுமக்கள் சிலர் தனது மொபைல் போனில் இதனைப் படம்பிடித்துள்ளனர். வீடியோவில் மிக முக்கியமான ஒரு விஷயமாக, அந்த இடத்தில் ஒரு போலீஸ்காரர் இருப்பதும் பதிவாகியுள்ளது. ஒரு காவல்துறை அதிகாரி முன்னிலையிலேயே ஒரு பெண் கடத்தப்படுவது போன்ற சூழல் நிலவியது, அப்பகுதி மக்களின் பாதுகாப்புக் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடத்தப்பட்ட பெண் தன்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தொடர்ந்து கூச்சலிட்டது அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.
இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, குர்ரா போலீசார் இது குறித்து முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வீடியோவில் உள்ள ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட காரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், கடத்தப்பட்ட பெண் யார் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்களின் பின்னணி என்ன என்பது குறித்து உண்மைகளைச் சரிபார்த்து வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
