பெரம்பலூர் மாவட்டத்தில் கணவனை இழந்த துயரத்தில் வாழ்ந்த பெண் தனது குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆலத்தூர் தாலுகா தெரணி வடக்கு தெருவை சேர்ந்த நீலகண்டன் டிரைவராக பணியாற்றி வந்த நிலையில் பனை மரத்திலிருந்து விழுந்ததால் முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். நீண்ட நாள் சிகிச்சையில் இருந்த அவர் நலம் பெறாமல் கடும் வேதனையில் இருந்ததால் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். அந்த நேரத்தில் கர்ப்பமாக இருந்து அவருடைய மனைவி கவிதா பிறகு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது ஆறு மாத குழந்தையுடன் அண்ணன் வீட்டில் வசித்து வந்த கவிதா கணவரை இழந்த துயரத்தில் மன உளைச்சலுடன் இருந்துள்ளார்.
நேற்று மாலை கணவர் உயிரை முடித்த அதே வீட்டில் குழந்தையுடன் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்த போதும் பலத்த தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
