தூத்துக்குடி மாவட்டத்தில் தலைமை காவல் அதிகாரியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வரும் நபருக்கு திருமணம் ஆகி ஒரு மகளும் 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இப்படியான நிலையில் போலீஸ்காரருக்கு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவருடைய உறவுக்கார பெண்ணான சக்தி மகேஸ்வரி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. தன்னுடைய குடும்பத்தை பற்றி எந்த கவலையும் இல்லாமல் அடிக்கடி அவரை சந்தித்து போலீஸ்காரர் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தனது கணவரை வெறுத்து ஒதுக்கிய போலீஸ்காரரின் மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் இரண்டு குழந்தைகளும் போலீஸ்காரரின் பராமரிப்பிலிருந்து வந்த நிலையில் தனது கள்ளக்காதலியே கதி என கிடந்த போலீஸ்காரர் தனது குழந்தைகளையும் சரியாக பராமரிக்கவில்லை. இது அவருடைய 16 வயது மகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் தனது குடும்பம் பிரிந்து சென்றதற்கு சக்தி மகேஸ்வரி தான் காரணம் என்று கருதிய அந்த சிறுவன் தன்னுடன் பள்ளியில் படிக்கும் சக நண்பனுடன் சேர்ந்து அவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி நேற்று மதியம் நண்பனுடன் சக்தி மகேஸ்வரியின் வீட்டுக்குச் சென்ற 16 வயது சிறுவன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். பிறகு இரண்டு சிறுவர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிறுவர்களை தேடி வருகின்றனர். தந்தையுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணை 16 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
