திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த ரஞ்சிதா (32) என்பவருக்குக் கந்தசாமி (36) என்பவருடன் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. திருமணத்தின் போது போதுமான சீர்வரிசைகள் கொடுத்தபோதிலும், கந்தசாமி தொடர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார். சமீபகாலமாகத் தனக்கு தங்க பிரேஸ்லெட் வாங்கி தருமாறு வற்புறுத்தி வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணவனின் தொடர் கொடுமையால் மன உளைச்சலுக்கு ஆளான ரஞ்சிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உயிரை மாய்த்துக் கொண்டார்.
ரஞ்சிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் தாராபுரத்தில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டு உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அவர்களைச் சமாதானப்படுத்தி, உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வரதட்சணைக் கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கணவர் கந்தசாமியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
