கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஷார்ஜாவில் கொல்லத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மற்றொரு பெண் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .குடும்ப வன்முறையின் காரணமாக தற்கொலை முடிவு எடுத்திருப்பதாக குடும்பத்தினர் கூட்டம் சாட்டியுள்ளார்கள். கேரள மாநிலம் கொல்லம் கோழிவிலா பகுதியைச் சேர்ந்தவர் அதுல்யா. 30 வயதான இவருக்கும் சதீஷ் என்பவருக்கும் 2013 வருடம் திருமணம் நடந்துள்ளது. சதீஷ் துபாயில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றியதால் மனைவியோடு ஷார்ஜாவில் வசித்து வந்துள்ளார்.
மது பழக்கத்திற்கு அடிமையான சதீஷ் அடிக்கடி மனைவியோடு தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அதுல்யா. தன்னுடைய கணவர் உடல் ரீதியாக தாக்குதல் நடத்தியது குறித்து தன்னுடைய சகோதரிக்கு போட்டோ மற்றும் வீடியோக்கள் அனுப்பி இருந்தார். இதை வைத்து அதுல்யா குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளார்கள். திருமணமாகி 6 மாதங்களில் தனது மகள் பல சித்திரவதைகளை அனுபவித்து வந்ததாக கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கொடுத்துள்ள வீடியோ ஆதாரத்தில் சதீஷ் நாற்காலியை தூக்கி அடிப்பது போன்ற காட்சி உள்ளிட்டவை இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சதீஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
