மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியைச் சேர்ந்த நேஹா என்ற பெண், தனது திருமணமான சில மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன், அவர் ஏழு பக்கங்கள் கொண்ட ஒரு தற்கொலை கடிதத்தில் தனது தற்கொலைக்குக் காரணம் கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினரின் துன்புறுத்தலே என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கடிதத்தில், நேஹாவின் கணவர் சந்தோஷ் தன்னுடைய ஒழுக்கத்தின் மீது சந்தேகம் கொண்டிருந்ததாகவும், “உனக்கு நிச்சயம் ஒரு காதலன் இருப்பான்” என்று கூறி ‘கன்னி தன்மை சோதனை’ செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கணவர் சந்தோஷ் சட்டவிரோத உறவில் இருந்ததாகவும், தனது காதலியின் அந்தரங்க புகைப்படங்களைக் காண்பித்து தன்னைத் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய மூன்று நாத்தனார்கள் மற்றும் மாமியார் சிறுசிறு காரணங்களுக்காகத் தன்னை ஏளனம் செய்ததாகவும், திட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தினமும் கொஞ்சம் கொஞ்சமாகச் சாவதற்குப் பதிலாக, ஒரேயடியாக உயிரை விட்டுவிட்டதாக நேஹா கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நேஹாவின் கணவர் சந்தோஷ், மாமியார் மற்றும் மூன்று நாத்தனார் ஆகியோரைக் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
