ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சாம்பார் பகுதியில் கமலா தேவி என்ற 65 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவர் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதோடு, அங்கிருந்த நகை மற்றும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மூதாட்டியின் நெருங்கிய உறவினரான லலிதா என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து லலிதாவைப் பிடித்து விசாரித்ததில், அவரும் அவரது காதலன் பப்லுவும் சேர்ந்துதான் இந்த அதிர்ச்சிச் சம்பவத்தை அரங்கேற்றியது அம்பலமானது. ஆடம்பர வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கிற்காகப் பணம் தேவைப்பட்டதால், இருவரும் திட்டமிட்டு மூதாட்டியைக் கொலை செய்து நகை, பணம், ஏடிஎம் கார்டுகள் மற்றும் அடையாள ஆவணங்களைத் திருடிச் சென்றுள்ளனர். தற்போது காவல்துறையினர் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த நகைகள் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
