மத்தியப் பிரதேச மாநிலம் சிங்கரௌலி மாவட்டத்தில், திருமணமான ஒரே மாதத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவியின் கொடூரச் செயல் அம்பலமாகியுள்ளது. உமா என்ற பெண்ணிற்கும் அஜய் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. ஆனால், திருமணத்திற்கு முன்பே அமர் பகதூர் என்பவருடன் காதலில் இருந்த உமா, தனது கணவனைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டியுள்ளார். இதன்படி, தனது கணவனை ஆசை வார்த்தை கூறி பிறந்த வீட்டிற்கு வரவழைத்து, அவர் வரும் வழியைத் தனது காதலனுக்குக் காட்டிக் கொடுத்துள்ளார்.
திட்டமிட்டபடி காதலன் அமர் பகதூர் தனது நண்பருடன் இணைந்து, நள்ளிரவில் காட்டுப்பகுதியில் அஜய்யை வழிமறித்துக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் இது ஒரு சாலை விபத்து என்று காவல்துறையை நம்ப வைப்பதற்காக, உயிரிழந்த அஜய்யின் உடலை அவரது இருசக்கர வாகனத்தின் அடியிலேயே போட்டுவிட்டுத் தப்பியோடினர். இருப்பினும், சடலத்தில் இருந்த காயங்களால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது அந்தப் பெண், அவரது காதலன் மற்றும் உடந்தையாக இருந்த நண்பர் என மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
