தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், யூடியூப் போன்ற ஆன்லைன் வீடியோக்கள் மூலம் பூட்டுகளை உடைக்கும் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, புர்கா அணிந்து 5 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 25 வயது பெண்ணைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத் உப்பல் பகுதியைச் சேர்ந்த பாாக ஜெயா (25) என்ற பெண், தனது அடையாளத்தை மறைப்பதற்காகப் புர்கா அணிந்து பூட்டிய வீடுகளைக் குறிவைத்து வந்துள்ளார். பூட்டுகளை எளிதில் உடைப்பது எப்படி என்று ஆன்லைனில் வீடியோக்களைப் பார்த்துப் பயிற்சி பெற்ற அவர், ஹேண்ட் கட்டர் உபகரணத்தைப் பயன்படுத்தி வீட்டின் பூட்டுகளை உடைத்துத் துணிச்சலாகத் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
உப்பல் போலீசார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் இணைந்து நடத்திய தீவிர விசாரணையில் பாாக ஜெயா பிடிபட்டார். அவரிடமிருந்து சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 48 சவரன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணம் மற்றும் அதிநவீன ஐபோன் 17 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர் மீது 5 கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
