அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில், உணவு அருந்தும்போது தொண்டையில் உணவுச் சிக்கி உயிருக்குப் போராடிய 8 வயது சிறுமிக்கு சரியான நேரத்தில் முதலுதவி அளிக்கப்படாததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மாநிலம் லிண்டேலில் உள்ள வெல்மா பென்னி தொடக்கப் பள்ளியில் 8 வயது சிறுமி ஏட்ரியன் தாம்சன் கடந்த ஏப்ரல் மாதம் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக உணவு தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு திணறிய சிறுமி, உணவகத்தில் இருந்த பெரியவர்களிடம் உதவி கேட்டு ஓடியுள்ளார். பின்னர் செவிலியர் அறையை நோக்கிப் பதற்றத்துடன் ஓடிய காட்சிகள் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளன.
சிறுமி 911 அவசர உதவிக்கு அழைப்பதற்குள் தீவிர நிலைக்குச் சென்று மறுநாள் காலையில் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகவும் பள்ளி ஊழியர்களின் தாமதம் குறித்தும் மறுவிசாரணை நடத்தக் கோரி சிறுமியின் பெற்றோர் சிசிடிவி வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். குழந்தைகள் அதிகம் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் ‘ஹெய்ம்லிச்’ (Heimlich Maneuver) எனப்படும் தொண்டை அடைப்புக்கான முதலுதவிப் பயிற்சி கட்டாயமாக்கப்பட வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
