மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் உள்ள விடுதி ஒன்றில், செவிலியர் ஒருவர் தவறான கதவைத் தட்டியதால் நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்த அந்தப் பெண், உதவி கேட்கத் தனது நண்பர் தங்கியிருந்த 105-ம் எண் அறைக்குச் செல்ல முயன்றார்.
ஆனால், வழிமாறி இரண்டாவது மாடியில் இருந்த 205-ம் எண் அறையைத் தட்டியபோது, அங்கிருந்த மூன்று நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துள்ளனர். உங்கள் நண்பர் உள்ளேதான் இருக்கிறார் என்று பொய் கூறி ஏமாற்றி, அந்தப் பெண்ணை அவர்கள் சிறைபிடித்தனர்.
மது போதையில் இருந்த அந்த கும்பல், செவிலியரைத் துன்புறுத்தி கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்ததோடு, மூவரும் சேர்ந்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் அந்த நபர்களிடமிருந்து தப்பித்து வந்த செவிலியர், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், குற்றச் செயலில் ஈடுபட்ட மூன்று பேரையும் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். ஒரு சிறிய கவனக்குறைவு இவ்வளவு பெரிய விபரீதத்தில் முடிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
