ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி படம் பார்க்கச் சென்ற பிரியங்கா என்ற 28 வயது மருத்துவக் கல்லூரி மாணவி, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்துமிடம் தொடர்பாக அங்கிருந்த இரு இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், அப்பெண்மணி தனது வாகனத்தில் வெளியேறியபோது, அவரைப் பின்தொடர்ந்து சென்று அதிவேகமாக வந்து காரால் மோதியுள்ளனர். இதில் கீழே விழுந்த மாணவியின் மீது காரை ஏற்றிவிட்டுத் தப்பியோடி கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்த அம்மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்ட அவர் தற்போது மூளைச்சாவு அடைந்து உயிருக்குப் போராடி வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பிரகாஷ் நகர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் சம்பவத்தின்போது மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
