உத்தரப் பிரதேச மாநிலம் சந்த் கபீர் நகர் பகுதியில், 21 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தனது மனைவியை அவரது காதலனுக்கே ஒரு கணவன் திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. புத்திராம் நிஷாத் மற்றும் பூல்மதி ஆகிய இருவருக்கும் காதல் திருமணம் நடந்து 5 குழந்தைகள் உள்ள நிலையில், அதே ஊரைச் சேர்ந்த அவதேஷ் என்ற நபருடன் மனைவிக்கு ரகசியத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பலமுறை பஞ்சாயத்து செய்தும் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை.
தினமும் நடக்கும் குடும்பச் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தான் நிம்மதியாக வாழ நினைத்த கணவர் புத்திராம், மனைவியின் விருப்பப்படியே அவரை அவதேஷுடன் சேர்த்து வைக்க முடிவெடுத்தார். இதற்காக, அஷ்ரஃபூர் சிவன் கோவிலில் ஊர் மக்கள் முன்னிலையில் இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்து அவர்களை மனதார வாழ்த்தி வழியனுப்பினார். விருப்பம் இல்லாதவரை கட்டாயப்படுத்தி தன்னுடன் வாழ வைப்பதில் அர்த்தமில்லை என கணவர் கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள போதிலும், தம்பதியின் 5 குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என அப்பகுதி மக்கள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.
