தற்காலத்தில் சில இளைஞர்கள் இருசக்கர வாகன ஓட்டுதலை ஒரு சாதாரணப் பயணமாகப் பார்க்காமல், ஆபத்தான சாகசங்களை அரங்கேற்றும் தளமாக மாற்றிக் கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து மிகுந்த பொதுச் சாலைகளில் அதிவேகமாகப் பைக்குகளைச் செலுத்தி ஸ்டண்ட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இத்தகைய சாகசங்கள், சாகசத்தில் ஈடுபடும் நபரின் உயிரைப் பறிப்பது மட்டுமின்றி, சாலையில் பயணிக்கும் மற்ற பொதுமக்களின் உயிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைகின்றன. பொதுச் சாலை என்பது ரேஸ் மைதானம் அல்ல என்றும், சில வினாடிகள் தரும் ஆபத்தான ஆசை ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்நாளையே பறித்துவிடும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
“வேகத்தைக் காட்டாமல் விவேகத்தைக் காட்டுங்கள்; பாதுகாப்பாக வீடு சென்று சேர்வதே உண்மையான வெற்றி” என்ற கருத்துகளுடன், சாலையில் இதுபோன்று பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஆபத்தான பைக் ஸ்டண்டுகளில் ஈடுபடும் இளைஞர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
