மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் இந்தாபூர் பகுதியில் நிலத்தகராறு காரணமாக இரண்டு மகன்கள் தங்கள் வயதான தாய்லாந்தையும் தந்தையையும் கட்டையால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 65 வயதான துக்காராம் மற்றும் அவரது மனைவியை இவர்களது மகன்களான சஞ்சய் மற்றும் ராஜேந்திரா ஆகியோர் காரில் வந்து வழிமறித்து, தாயின் பெயரில் இருந்த நிலத்தை ஏன் விற்றீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இருவரும் தங்களது பெற்றோரை நடுரோட்டிலேயே தாக்கி கடுமையாக காயப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் முதிய தம்பதியினருக்கு முதுகு, முகம், கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும், நிலத்தை திருப்பித் தரவில்லை என்றால் கொன்றுவிடுவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்தக் கொடூரச் செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, பாதிக்கப்பட்ட தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இந்தாபூர் காவல் நிலைய போலீசார் அந்த இரண்டு மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
