ரங்காரெட்டி மாவட்டம் மொய்னாபாத் அருகே உள்ள பெத்தமங்கலாரம் கிராம எல்லையில் நள்ளிரவில் சோகமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கே.ஜி.ரெட்டி பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த முக்சா சரண் (20) மற்றும் யஷ்வந்த் (20) ஆகிய இரு மாணவர்கள் திறந்தவெளியில் சுமார் 10 முதல் 12 சக மாணவர்களுடன் இணைந்து பார்ட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது அங்கு மதுபான பாட்டில்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த சமயத்தில், அப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் வாகனத்தைக் கண்ட மாணவர்கள் எதிர்பாராத விதமாக பீதியடைந்துள்ளனர். போலிஸாரிடம் மாட்டிவிடுவோமோ என்ற அச்சத்தில், அனைவரும் அருகிலிருந்த விவசாய நிலங்களை நோக்கி நாலாப்புறமும் தப்பியோடியுள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் அங்கு என்ன இருக்கிறது என்பதை அறியாமல் இருட்டில் மாணவர்கள் வேகமாக ஓடியுள்ளனர்.
விவசாய நிலங்களில் வனவிலங்குகள் மற்றும் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக நில உரிமையாளர்களால் மின்வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. நிலத்தை நோக்கி ஓடிய முக்சா சரண் மற்றும் யஷ்வந்த் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்வேலியை தொட்டுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
