மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் சிங்ஹாட் சாலை அருகே உள்ள ஹிங்னே குர்த் பகுதியில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை இளைஞர் ஒருவர் கொடூரமாக அடித்து நொறுக்கியுள்ளார். கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்ஹாட் சாலை காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கார்களைச் சேதப்படுத்திய சாந்தனு சுரேஷ் மெண்ட் (19) என்ற வாலிபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வாலிபர் அங்குள்ள 6 கார்கள் மற்றும் எஸ்.யூ.வி ரக வாகனங்களின் பின்புறக் கண்ணாடிகள் மற்றும் முகப்புப் பகுதிகளைச் சுத்தியலால் அடித்து நொறுக்கியுள்ளார். தாக்குதலுக்கு முன்பாக அந்த வாலிபர் யாருக்கோ ‘வீடியோ கால்’ செய்து பேசிவிட்டு, அதன்பின்னரே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், அவர் வீடியோ காலில் யாருடன் பேசினார் மற்றும் தாக்குதலுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
