கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியடுத்த கீழமூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், சி.முட்லூரில் உள்ள அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். தந்தையை இழந்து தாயுடன் வசித்து வரும் இவரை, அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஐயப்பன் என்ற வாலிபர் பள்ளிக்குச் சென்று வரும் வழியில் தொடர்ந்து பின்சென்று காதலிக்குமாறு வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில், தாய் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் சிறுமி தனியாக இருந்ததை நோட்டமிட்ட ஐயப்பன், நேராக வீட்டிற்குள் நுழைந்து மீண்டும் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு அந்தச் சிறுமி உடன்பட மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பெருங்கோபமடைந்த ஐயப்பன், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்துச் சிறுமியின் கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயங்களுடன் இருந்த அவரை மீட்டு அண்ணாமலைநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிதம்பரம் தாலுகா காவல்துறையினர், தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
