பேன்சி கடையில் 17 வயது சிறுமிக்கு தாலி கட்டிய வாலிபர்… யாருமில்லதா நேரத்துல நடந்த திடுக்கிடும் நிகழ்வு… மதுரையை அதிரவைத்த சம்பவம்….!

By Nanthini on ஆனி 16, 2026

Spread the love

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமிக்கு வாலிபர் ஒருவர் திடீரென தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி அங்குள்ள ஒரு தனியார் பேன்சி கடையில் பணியாற்றி வருகிறார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாரி (23) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று அந்தப் பேன்சி கடைக்கு வந்த மாரி, கடையில் மற்ற ஊழியர்கள் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வாடிக்கையாளர்கள் வெளியேறியவுடன் சிறுமியிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, தான் பையில் மறைத்து வைத்திருந்த தாலிக்கயிறை எடுத்து எதிர்பாராத விதமாக அந்தச் சிறுமியின் கழுத்தில் கட்டியுள்ளார்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை நேரில் கண்ட மற்றொரு கடை ஊழியர், உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். பதறியடித்துக் கொண்டு பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விரைந்தனர். அப்போது அங்கு ரோந்துப் பணிக்காக வந்திருந்த ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை போலீசாரிடம் தங்களது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீருடன் புகார் அளித்தனர். தகவலைப் பெற்றுக் கொண்டு சம்பவ இடத்திற்குச் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் அதிரடியாக விரைந்து வந்தனர். போலீசார் வருவதைக் கண்ட வாலிபர் மாரி, அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து, கடையிலிருந்த சிறுமியை மீட்ட பெண் போலீசார், அவரைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

   

தற்போது தப்பியோடிய வாலிபர் மாரியைப் போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், தாலி கட்டிய சமயத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், வேலை பார்க்கும் இடத்திற்கே புகுந்து, மதுபோதையில் மைனர் சிறுமிக்கு வாலிபர் ஒருவர் கட்டாயத் தாலி கட்டிய இந்தச் சம்பவம் திருமங்கலம் பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.